Wednesday 15 August 2012



இடைவெளியற்ற தூரம் நீ
நெருக்கமான இடைவெளி நான்...
-வான்போல் வண்ணம்கொண்டான்.




Saturday 21 July 2012

குப்பை தேசம்


என்ன செய்வதென்று தெரியாமல் காகங்கள் காலையிலேயே கரையத்தொடங்கிவிட்டன.ஆமாம் இந்தப்பட்டணத்தில் கோழி கூவாது. இங்கு மட்டுமல்ல எந்தப்பட்டணத்திற்கு சென்றாலும் கோழி கொக்கரிக்க  மட்டுமே செய்யும். ஆனால் இன்னும் மக்கள் நம்புகிறார்கள் கோழிதான் கூவுகிறதென.ஆனால் பட்டணத்தில் கறிக்கடைகளில் மட்டுமே கொக்கரித்தும் கூவிக்கொண்டும் இருந்தன கோழிகளும் சேவல்களும் .

காகங்கள் கரைந்துகொண்டிருந்தது தானே.ஆமாம். காலை 7 மணியாகிவிட்டதென யாரும் சொல்லாமல் தெரிந்திருந்தது காகங்களுக்கு. மனோ பாட்டி முன்னோர்களுக்கு படைப்பதென கருதி இரண்டு கரண்டி மாவினை இட்டவித்து சுவற்றின் மீது வைத்தாள். காகத்தின் கரைச்சல் முடிந்தது. நகரத்தில் இரைச்சல் ஆரம்பமானது. சிறிது நேரத்திலேயே யாசகம் கேட்டு வந்தான் சிறுவன் ஒருவன், எதுவுமில்லை என்று சுருக்கங்களை சுருக்கி கோரமுகம் காட்டினாள்.

சுத்தமான காற்றினை செலவு செய்து அசுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர் நம் மனித இனத்தினர்.அனைவருக்கும் அவசரமும் பதற்றமும்.இவர்களை சுமந்த பாவத்துக்கு அசுத்தமாகிக்கொண்டிருந்தது நிலமும்.குருவியின் சத்தம் அழகாய் கேட்டது அந்த சாலையில்.மரமில்லாத சாலையில் குருவியா?!, ஒரு அலைபேசியில் ரிங்டோனாக ஒலித்தது குருவியின் குரல். விநாயகப்பெருமான் போல வயிறு வீங்கிய போக்குவரத்துக்காவலர் ஒருவர் யாரோ கோட்டை தாண்டிவிட்டாரென கப்பம் வசூலித்துக்கொண்டிருந்தார்.

 அரசாங்கத்தின் சாராய விற்பனையால் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தான் அங்கொரு சிறுவன். அது அவனின் தகப்பனுக்கு அன்றிரவு ஒரு குவார்ட்டரோ  காலையில் கொக்கரித்த ஒரு கோழியாகவோ கிடைக்க உதவி செய்யும்.கண்களில் பசியும்,இடுப்பில் இந்திய சட்ட அமைப்பில் இருப்பது போல ஆங்காங்கு ஓட்டைகளுடன் கூடிய ஒரு கால் சட்டையும் அணிந்திருந்தான். கால்சட்டையின் நிறம் பார்த்ததில் அவன் அரசாங்கப்பள்ளியில் படித்திருக்கவேண்டும், இல்லையேல் அவன் தந்தை துப்புரவுப்பணியாளனாய் இருக்கவேண்டும் என்று யூகிக்க தோன்றியது.

களைத்துப்போன சிறுவன் அங்கிருந்த மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்.பக்கத்தில் இங்கே குப்பைகள் கொட்டக்கூடாது என்று எழுதியதற்கு ஏற்றார்போல் குப்பைகள் குவிந்துகிடந்தது. அதில் தனது மானத்தைக்காத்துக்கொள்ள எதாவது துணி இருக்குமா எனத்தேடத்தொடங்கினான். அந்த ஓரமாய் நாய் மேய்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தான் ஒரு வசதி படைத்த வசம்பு. அவனுடைய நாய் மூத்திரம் போவதற்கு தடையாய் இருக்கிறான் இந்த சிறுவன் என அவனைத்துரத்த, சிறுவனோ அங்கு கிடைத்த ஒரு செய்தித்தாளை எடுத்து மானத்தை மறைத்து ஓடினான்.செய்தித்தாளில் "இந்தியன் என்பதில் பெருமதில் கொள்வோம்" என பிரதமர் பேட்டி அளித்திருந்தார்.


-கிட்டு.








Sunday 8 July 2012

ஒரு கடிதம்


அன்புள்ள அம்மாவிற்கும் அறிவு தந்த அப்பாவிற்கும்,

    உங்கள் அன்பு மகனின் முத்தங்களும் வணக்கங்களும். எப்படி இருக்கீங்கனு கேட்க மாட்டேன் நான். ஏன்னா நீங்க நல்லா இருப்பீங்கன்னு ஒரு நம்பிக்கையிலதான் இங்க என்னோட நாட்கள் கழியுது. அங்க அடிக்கடி கரன்ட் கட் ஆகுதுனு சொன்னாங்க. இப்போ இருக்கா?

 இங்க பனிமூட்டம் அதிகமாகவே தான் இருக்கும்.ஆனா கொஞ்ச நாளா அப்படி இல்லை.இங்கயும் வெயில் வாட்டி எடுக்குது. பனிமூட்டம் இருந்தாலும் அதிகமாவே கரையுது. அடுத்த போகிக்கு இன்னும் நாலஞ்சு டயர் வாங்கி எரிச்சுவிட்டாங்கனா இன்னும் இங்க நல்லாவே உருகும்.

செல்போன், -மெயில் அது இதுனு வந்ததுக்கு அப்புறமும் நீங்கதான் இந்திய தபால்துறைக்கு கொஞ்சம் உதவி பண்ணலாம்னு சொல்லி கடுதாசி எழுதி அனுப்ப சொல்றீங்க.அதுனாலதான் மெனக்கெட்டு எழுதவேண்டியதா இருக்கு. நான் கூட பரவாயில்ல, என் கூட இருக்க ஒரு சில தமிழ் பசங்களுக்கு தமிழ் பேச மட்டும்தான் வருமாம்,என்னைய மாதிரி தப்புத்தப்பா எழுதக்கூட தெரியாதாம்.கேட்டா பள்ளிக்கூடத்துல ஒண்ணாப்பு படிக்கும்போதே ஹிந்தி படிக்க சேர்த்துட்டாங்களாம். இந்தி தெரியாம ஒரு 3 மாசம் எனக்கு தொல்லையா இருந்துச்சு. ஆனா பழகுனதுல இப்போ கொஞ்சம் திக்கி திணறி பேசுறேன்.

விவசாயம் எப்படி இருக்கு இப்போ ? தண்ணி வத்திடுச்சுன்னு போர்வெல் போட்டுக்கலாம்னு சொன்னதுக்கு , இல்ல சொட்டு நீர் பாசனம் போதும் நம்ம வயக்காடுக்குனு சொன்னீங்க. புதுசு புதுசா விவசாயம் இருக்காம்ப்பா.அதயும் கொஞ்சம் முயற்சி செஞ்சு பாருங்க.அதுக்காக எதோ தகவல் தர்றதுக்கு நம்பர் இருக்கு.1551. இதுக்கு அடிச்சு கேட்டீங்கனா எதாச்சும் தகவல் கிடைக்கும். இந்தியிலதான் பேசுவாங்கனு நெனக்குறேன்.

அதுவுமில்லாம இப்போ விவசாய நிலம் எல்லாம் ரியல் எஸ்டேட் காரனுங்க போட்டி போட்டு வாங்கி விக்குறாங்களாம். அத மட்டும் செஞ்சுடாதிங்கப்பா. அம்மா அடிக்கடி சொல்லும் ,
"ஊட்டிவிட்டது நானா இருந்தாலும், உழுதுபோட்டது உங்கப்பனா இருந்தாலும் , உன் உசுரு இருக்க காரணம் நம்ம பூமிதான்யா"னு. என்ன கஷ்டம் வந்தாலும் அத மட்டும் விட்டுக்கொடுக்காதீங்க.

எனக்கு இங்க லீவ் கேட்டுருக்கேன்.கிடைக்குமானு தெரியல.வெள்ளைக்காரன் கிட்ட இருந்து வாங்குன சுதந்திரத்த இன்னும் காஷ்மீருக்கு மட்டும் கிடைக்கமுடியாம நாங்க இங்க அல்லாடுறோம். எப்போ பாகிஸ்தான்காரன் வருவான், எப்போ சீனாக்காரன் வருவான்னு காவக்காத்துட்டு இருக்கோம்.என்னோட ஆசையும் இதுல கிடைக்குற நிம்மதியும் அந்த கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்து தட்டுறதுல கிடைக்காதுனு தான் இதுக்கு வந்தேன். பட்டாளத்தான் அப்பன் ஆத்தானு உங்களுக்கும் ஊருக்குள்ள பெருமைதான. அனுப்பிவிட்ட பணத்த பாதி செலவுக்கும் , விவசாயத்துக்கும் வச்சுட்டு மீதிய இன்சூரன்ஸ்ல கட்டிக்குங்க.ஏமாத்துற பைனான்ஸ் கிட்ட தேடி போய் குடுக்காதீங்க சொல்லிப்புட்டேன்.

வேற என்ன இருக்கு சொல்ல, ஆஹ். தேர்தல் வருதுன்னு சொன்னாங்க. யோசிச்சு ஓட்டுப்போடுங்க. காசு எதாச்சும் குடுத்தாங்கன்னா அதக்கொண்டுபோய் எதாச்சும் உதவி செய்ற ஆஸ்ரமம், காப்பகத்துல குடுத்துடுங்க.அவங்களாச்சும் நல்லா சாப்பிடுவாங்க.

உங்க ஒடம்ப பாத்துக்குவீங்க.நானும் இங்க நல்லா இருக்கேன். உங்ககிட்ட பேசனும்னு ஆசதான்.நீங்கதான் ஊர்ல குருவிய கொன்ன அந்த போன் வேணாம்னு சொல்லிட்டீங்க.சரி விடுங்க.நேர்லயே பாத்து பேசிக்கலாம்.

என்றும் உங்கள் அன்புள்ள மகன்,
மேஜர்.தமிழ்மகன். (எ) ராசுக்குட்டி.

என கடிதத்தை எழுதிவிட்டு "இந்த லெட்டர அப்படியே போஸ்ட் பண்ணிடுங்க" என கார்க்கியிடம் தந்தான் பிரபா. "மேஜர்.தமிழ்மகன்னு யாருமே இங்க இல்லையே மேஜர்"
"யாருமில்லாத எனக்கு அப்பா அம்மாவா இருந்தது அவங்கதான்,தமிழ் வேலை கிடைக்காத விரக்தியால தீவிரவாதியா மாறிட்டான்.போன வருஷம் ப்ளாஸ்ட் நடந்தப்போ அவன்னு தெரிஞ்சுதான் சுட்டேன்".

















Tuesday 22 May 2012

அவள் உதடுகளை
முத்தத்தால் நிரப்பி
என் உதடுகளால்
உடைத்துக்கொள்கிறாள்.
-வான்போல் வண்ணம்கொண்டான்

Sunday 6 May 2012

என் கண்ணீருக்கு
கைக்குட்டையாய் உன் கண்கள்
உன் கண்ணீருக்கு
கைக்குட்டையாய் என் முத்தங்கள்.
மீண்டும் அழச்சொல்கிறது காதல்.
-வான்போல் வண்ணம்கொண்டான்.


Monday 23 April 2012

என் தட்டான்


அன்று சற்று புதிய முயற்சி... இயற்கை தந்த ஹெலிகாப்டரை புடிக்க ஆசை... அங்குமிங்கும் அது பறக்க... அதைப் பிடிக்கும் முயற்சியில் நான் என்னை மறக்க... ஓடி வந்த நான்... குடம் சுமந்து வந்த என் அக்காளை இடிக்க... இடறி விழுந்த அவள்... என்னைத் துரத்த... கடைசியில்... என்னிடம் தட்டானும்... அவள் கையில் நானும் சிக்குண்டோம்.. அதன் வாலில் நூலினைக் கட்டி விளையாட...அதுவோ பறந்து சென்றது... சில வருடம் கழித்து... கையில் அலைபேசியுடன் நான்... அக்காளும் இல்லை... விளையாட தட்டானும் இல்லை... வெறித்துப்பார்த்தேன்... இந்த அலைபேசி என் தட்டானை அழித்த கோபத்தில்... மணி அடித்தது. -வான்போல் வண்ணம்கொண்டான்.